Tuesday, September 28, 2010

புத்துணர்வுக்கு யோகா

நவீன விஞ்ஞான உலகில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயம் ஆகிவிட்டபோதும், மனிதர்கள் ஓய்வின்றி உழைப்பது தொடர்கதையாகி வருகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் அல்லாமல், பல தனியார் நிறுவனங்களிலும், அரசு துறைகளிலும் கூட ஊழியர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து உழைக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு அதிக உழைப்பு உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் களைப்பை ஏற்படுத்தும். இந்த களைப்பை அவ்வப்போது போக்காவிட்டால் அதுவே மன அழுத்தத்துக்கு வழிவகுத்துவிடும். எனவே உடல் மற்றும் மன களைப்பைப் போக்கி உற்சாகத்தை ஏற்படுத்த யோக பயிற்சி சிறந்த வரப்பிரசாதமாகும்.

தூக்கமின்மை, ஓய்வின்மை, கவனச் சிதறல், குழப்பமான மனநிலை, தேவையற்ற பயங்கள் ஆகியவை ஞாபக சக்திக்கு குந்தகம் விளைவித்துவிடும்.
இவர்களுக்கு யோகா பயிற்சி அவசியம். முறையாக, தொடர்ந்து செய்யப்படும் யோகா பயிற்சி, மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும் என சென்னையைச் சேர்ந்த யோகா குரு ஒருவர் கூறுகிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது:
யோகா பயிற்சியினால் மனிதனின் படைப்பாற்றல் அதிகரிப்பது பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பலரும் யோகா பயிற்சியினால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். எடுத்துக்கொண்ட பணியை கவனத்தோடு செய்து வெற்றி பெற யோகா உதவுகிறது.

ஆழ்ந்த தூக்கம்... மேலும் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கு முக்கிய ஆதாரம் சீரான தூக்கம். ஆழ்ந்த தூக்கத்தில்தான் உடல் உறுப்புகள் அனைத்தும் முழுமையான ஓய்வு பெறுகின்றன. இதன் மூலம் காலையில் எழும்போது, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.ஆனால், இயந்திரமயமான உலகில் பலர் தூக்கத்தையே இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தம் மற்றும் பல்வேறு மன நோய்களுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணம் என உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.யோகா பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுப்பதால் தூக்கமின்மை என்ற பிரச்னை தூர விலகிவிடும். முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, பின்னர் வீட்டில் தாங்களாகவே தொடர் பயிற்சியை மேற்கொள்லலாம் என்றார்.

விதிமுறைகள் என்னென்ன? உணவு முறையை சரியானபடி கடைப்பிடித்தால்தான் யோகாவின் முழுமையான பலனைப் பெற முடியும்.
முழு உணவு எடுத்துக்கொண்டால் அடுத்த 4 மணி நேரம் கழித்தே யோகா செய்யவேண்டும்.
சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால் அடுத்த 2 மணி நேரம் கழித்தே யோகா செய்யவேண்டும். டீ, காபி, குளிர் பானங்கள் அருந்தியிருந்தால் அடுத்த ஒரு மணி நேரம் கழித்தே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

யோகா முடித்த பின்னர், அரை மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ள வேண்டும். இதுபோல் பயிற்சி முடித்த அரை மணி நேரத்துக்குப்பின் குளிக்க வேண்டும்.
Thanks Dinamani

0 comments:

Post a Comment